Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Saturday, January 30, 2010

பதில் கிடைத்த சில கேள்விகள்...(10)

13]உண்மையில் மனது கஷ்டப்படும்போது அழுகிறோம்...பின் அதை சமாளித்து வருகிறோம்...நம்மால் முடியுல என்ற இயலாமை வரும் போது நம்பிக்கையாக.....இதுவும் கடந்து போகும் என்று எண்ணுவதுண்டு...
நம்பிக்கையாக நாம் முன்னேற தெரிந்து வைத்திருக்கும் வேண்டுமென்பதை என்ன என்று கூறுங்கள்...


நம்பிக்கையுடன் முன்னேற நான்கு அம்சத் திட்டம், ஒரு சின்ன உதாரணத்துடன் சொல்கிறேன்..

1. திட்டமிடல்
2. மீள்பார்வை
3. ஓய்வு, புத்துணர்வு பெறுதல்
4. சாதித்த மனநிறைவு

திட்டமிடல்:

நான் எப்பொழுதும் நீண்ட காலத் திட்டமும், அதை அடைய குறுகிய காலத் திட்டங்களும் வைத்திருப்பது வழக்கம்.

உதாரணமாக ஈரோடு செல்ல வேண்டும் பெங்களூரிலிருந்து.. இது நீண்ட காலத் திட்டம்.. இரவு 11:00 மணிக்குள் ஈரோடு சென்று சேர வேண்டும்.

பயணத்தை சிறிய துண்டுகளாகப் பிரிப்பேன்

1. புறப்படும் நேரம் மாலை 5 மணிக்குள்
2. ஒசூர் அடைதல் - 6
3. கிருஷ்ணகிரி - 6:40
4. தருமபுரி - 7:30
5. இரவு உணவு - 7:30 லிருந்து 8:15
6. ஓமலூர் 9:00
7. சங்ககிரி 9:40
8. ஈரோடு 10:20

பாருங்க அங்கங்க தேவையான நேரம், அப்புறம் இடைவெளி எல்லாமே இருக்கு. ஆரம்பத்திலேயே மனசை இதற்கு தயார் படுத்திகிட்டோம்னா பிரச்சனை இல்லை. நிம்மதியா இருக்கும்.. அதாவது

1. எதை அடைய விழைகிறோம்?
2. அதற்கான வழிமுறைகள் என்னென்ன? அடைய வேண்டிய நிலைகள் என்னென்ன?
3. எப்போது அடைய விரும்புகிறோம் (கூடிய சீக்கிரம் என்றால் உடனே உங்க நிம்மதி பறி போயிடுச்சி அப்படின்னு வச்சுக்குங்க.. )
4. எந்தந்த இடங்களில், நிலைகளில், நேரங்களில் மீள்பார்வை (ரிவியூ) செய்யணும்

இந்த நாலும் ஆரம்பத்திலேயே தெரிஞ்சு காரியம் அல்லது தொழில் செய்ய ஆரம்பிச்சா நிம்மதியான வாழ்க்கை இருக்கும்


மீள்பார்வை :

அடுத்ததாக ஒவ்வொரு நிலையிலும் இந்தத் திட்டத்தை மீள் பார்வை செய்யணும். எப்படியா? இதோ இப்படி.


1. ஒரு செயல் முடிந்தவுடன் அதிலிருந்து "என்ன பாடங்களைக் கற்றோம்"அதாவது "Lessons Learned" மட்டும் தொகுத்து மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

2. "அடுத்து என்ன?" "What Next" என்று அடுத்த அடிக்கு உடனே தயாராகனும். ஏன்னா நடந்து முடிந்ததை இனி மாற்ற முடியாது. அதனால் அப்படி செஞ்சிருந்தா பரவாயில்லையே.. இப்படி நடந்திருக்கக் கூடாதா அப்படின்னு யோசிக்காம, அடுத்து அடியில் என்ன மாற்றம் செய்தால் சமாளிக்கலாம் என்பதை யொசிக்கணும்.

3. மனசு சோர்ந்து போகும் பொழுது இதுவரை சாதிச்சதை நினைங்க. உடம்பு சோர்ந்து போகும் பொழுது போக வேண்டிய தூரத்தை நினைங்க..

எங்கே பிரச்சனை என்றாலும் அதற்கு அடுத்த பகுதியில் எப்படி மாற்றம் செய்தால் இலக்கை அடையலாம் என்பது இப்போ எளிதாக விளங்கும்.

3. ஓய்வு - புத்துணர்வு பெறல்

உணவு, உறக்கம், உல்லாசம் ஆகிய ஓய்வு முறைகள் நம் உடம்பையும் மன்சையும் நீண்ட நாட்களுக்கு புத்துணர்வோட வச்சு, நம்ம செயல்திறமையை அதிகமாக்கும். அதனால் திட்டமிட்ட ஓய்வு முறைகள் கண்டிப்பா தேவை. எப்படின்னா மரத்தை வெட்டிகிட்டே இருந்தா கோடாரி மொக்கை ஆகிடும். அப்பப்ப தீட்டித் தீட்டித்தான் வெட்டணும். அதே மாதிரி முறையான உறக்கம், விடுமுறைகள், உணவு நேரங்கள் இவற்றை எல்லாம் எப்ப பார்த்தாலும் தியாகம் பண்ணிகிட்டே இருக்கக் கூடாது. இவையும் வேலையின் ஒரு பகுதின்னே வச்சுக்குங்க.. மிகப் பெரிய இழப்பு வரும் என்பதைத் தவிர மற்ற நேரங்களில் முடிந்த வரை இதையெல்லாம் தள்ளி வைக்க முயற்சிக்காதீங்க. இல்லைன்னா வெற்றிக் கோட்டை அடையும் பொழுது உங்களைத் தவிர மத்தவங்க எல்லாம் கொண்டாடிகிட்டு இருப்பாங்க..

4. சாதித்த மன நிறைவு


ஒரு பெரிய செயலை பல சின்ன செயல்களா பிரிச்சு செஞ்சோம் இல்லையா? இதில வெற்றிகளின் எண்ணிக்கை அதிகம். சின்னச் சின்ன வெற்றிகளைக் கொண்டாடுங்க. சின்னச் சின்னத் தோல்விகளை மேலே சொன்னமாதிரி அனுபவங்களை மட்டும் எடுத்துகிட்டு விட்டுடுங்க.

கடைசி இலக்கை எட்டியே ஆகணும் என்ற அழுத்தம் இல்லாம சின்னச் சின்னச் செயல்களாகச் செய்ததால் அதிக வெற்றிகள், சிறிய தோல்விகள், அதனால் மனசு ரொம்பவே தெம்பா இருக்கும். முடிவுத் தூரம் எப்பவும் கண்ணுக்கெதிரே இருந்ததால் இலக்கை கண்டிப்பா அடைவோம். காலம் மட்டும் கொஞ்சம் முன்ன பின்ன ஆகும்.


மற்றபடி, சின்ன தோல்விகளுக்கு அழுவதும், பெரிய கஷ்டங்களின் போது என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. ஒரு கை பார்ப்போம் என்று எழுச்சி கொள்ளுவதும் உணர்ச்சி வசப்படுதல்கள் ஆகும். அப்படி இருந்தா நிம்மதி இருக்காது...


நம்பிக்கையோட, நிம்மதியா வாழ நான் மேலே சொன்ன வழி மிகவுமே உதவும்.

சுருக்கமாக,

எந்தச் செயலையுமே சிறு சிறு செயல்களாக, அளக்கக் கூடியதாக, குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட காரியங்களைச் செய்யணும் என்ற தெளிவோட, பிரித்து செய்தால் நிம்மதியாக வாழலாம்.

Thursday, January 28, 2010

பதில் கிடைத்த சில கேள்விகள்...(9)

12]சுதந்திரம் அப்பறம் வந்த குடியுரிமை பத்தி சொல்லுங்க.....
எப்படி இது என்னுடையது நிலம் அது அவருடையது ......
என்றெல்லாம் பிரித்தார்கள்.....
யார் பிரித்தது....
அப்போ காசுக்கு பதிலா பண்ட மாற்றமுறை இருந்ததா சொல்லுவாங்க....எப்போ?....ஏன்?

சுதந்திரத்திற்கு பின்னால் வந்தக் குடியுரிமையா? சுதந்திரத்துக்கு முன்னாலயும் நமக்கு அதே குடியுரிமை இருந்ததுங்க. ஆனா அதை உள்ளூர் ஆட்சியாளர்கள் முழுமையாக அனுமதிக்க வில்லை அவ்வளவுதான். நமது குடியுரிமைச் சட்டம், இங்கிலாந்தின் குடியுரிமைச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டதால் பிரிட்டிஷ் பிரஜைகளாக இருந்தபோதும், இன்று இந்தியக் குடிமகனாக இருக்கும் பொழுதும் ஏறத்தாழ அதே உரிமைகள்தான். மாறியது அரசியல் உரிமைகள்தான்.. எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் இப்படிச் சில விஷயங்கள் இந்தியாவைக் ஆட்சி செய்தவர்களால் கட்டுப்படுத்தப் பட்டன.

மனிதனின் ஆதிகாலத்தில் நாய் அல்லது புலி மாதிரிதான். ஒவ்வொரு குழுவும் தனக்குரிய எல்லையை அடையாளப்படுத்தி அங்கே வாழ்ந்தார்கள்.. வலிமை உள்ள குழு இடம் வேணும்னா மற்றக் குழுக்களில் ஆண்களைக் கொன்று, பெண்களை கைப்பற்றி இடங்களை கைப்பற்றினாங்க.

அப்புறம் நாகரீகம் வளர்ந்து விவசாயம் பெருக, குழுத்தலைவன் உத்தரவுப்படி நிலங்கள் உரிமையாக ஆரம்பித்தன.. குடும்ம்பங்களுக்கு நிலங்க்கள் உரிமையானாலும்,சும்மா கிடக்கறதை யாருக்கு வேணும்னாலும் குழுத் தலைவர் கொடுத்திடுவாரு.. ஒருத்தர்கிட்ட இருந்து பிடுங்கி இன்னொருத்தருக்கு கொடுத்திருவாரு..வரி வசூலிப்பது என்பது ஆற்றங்கரை நாகரீக காலத்திலிருந்தே இருக்கு.


இதுவே நாகரீகம் வளர்ந்து நாடுகள் உண்டானப்ப, குடும்ப அமைப்புகள் பலமானது.. பரம்பரை சொத்துகள் உருவானது அப்போதான். பரம்பரையா சொத்துகள் இருந்தாலும், இராஜா இந்த இடம் அரசனுக்குச் சொந்தம் அப்படின்னா கொடுத்திடனும். இராஜா எதையாவது குடுத்து சரிபண்ணிக்குவாரு.

இந்தக் காலங்களில் பண்டமாற்று இருந்தது. நான் அரிசி குடுத்தா நீ பருப்பைக் குடு.. பானை கொடுத்தா மாம்பழம் கொடு மாடு கொடுத்தா மனையைக் கொடு அப்படின்னு கன்னாபின்னான்னு இருந்தது அரசர்கள் காலத்தில் நெல் என்பது பொதுப்பணமாகி மத்ததெல்லாம் அதை வச்சி சொல்வாங்க. அதாவது 1 படி நெல்லுக்கு இத்தனை கத்திரிக்காய் இப்படி..

அதற்கு பின்னால்தான் அரசுகள் காசு அச்சடிக்க ஆரம்பித்தன (2000 வருஷத்துக்கு முன்னாடியே). சொத்துப் பத்திரங்கள் தாமிர பட்டயங்களில் எழுதப்பட ஆரம்பித்தன. நாடு முழுக்க அரசனுக்குச் சொந்தம். பட்டயம் இருந்தா மட்டும்தான் தனிமனுசன் அதை உரிமை கொண்டாடலாம். ஒவ்வொரு கிராமத்திலும் நிலப்பட்டய விவரம் சேகரிச்சு வச்சிருந்தாங்க.. வரி வசூலிக்க. நிலத்தை விக்கவோ யாருக்கோ தான தருமம் செய்யவோ அரசர் காலங்களில் உரிமை இருந்திச்சி...

வரிகள் கட்டப்படாத நிலம் அத்தனையும் அரசாங்கத்துக்குச் சொந்தமாயிடும்.

அப்பபோ அரசர் அளிக்கிற நன்கொடைகள் கூட பட்டயமாத்தான் தருவாங்க... இன்னிக்கு பட்டா கொடுங்க பட்டா கொடுங்கன்னு கேட்கிறாங்களே அது அந்தக் காலத்திலேயே இருந்திருக்கு,,

இன்றைக்கு இருக்கும் முறை பிரிட்டிஷ் காலத்தில் நிலங்கள் அளக்கப்பட்டு முறைமைப் படுத்தப்பட்டு ஆவணக் காப்பீடு மூலம் நடத்தப்படுகிறது..

ஏன்னு கேட்டா என்னத்தைச் சொல்ல.. நதிக்கரை நாகரீகங்கள் வளர்ந்த காலத்தில் விவசாயம் செய்யக் கத்துகிட்டப்பவே, மனிதக் குழுக்களுக்கு நில உரிமை தேவைப் பட்ட்டிருக்கு.. நான் உழைச்சி பயிரிட்ட மாம்பழத்தை நீங்கச் திருடிகிட்டுப் போனா சண்டை, சண்டை ஒரே சண்டையா போயிடுமில்ல.. அதனால்தான்.

ஆக நிலங்களைச் சொந்தம் கொண்டாடுவது என்பது 5000 வருடங்களுக்கு மூன்னாலயே இருந்திருக்கு..

Thursday, January 21, 2010

குட்டீஸ்...(13)

இன்றும் குட்டிமாவும் ஸ்கூலில் நடந்ததை அம்மாவிடம் சொல்லிக் கொண்டே
வந்தாள்.

வீட்டிற்கு நுழைந்தவுடன் பாட்டியும் தாத்தாவையும் பார்த்ததில் ஆர்வமாக
சொல்லத் கொண்டிருந்தாள் அப்போதே பாட்டி சாப்பாடு ஊட்டி கொண்டிருக்க மழலையின் பேச்சில் இருவரும் அலாதியான மகிழ்ச்சியில் இருந்தனர்.

தாத்தாவுடன் பேத்தி அப்படியே தூங்கியும் விடுகிறாள்...
அம்மாவிற்கு உதவியாக பாட்டி சமையலுக்கு தேவைப்படும் சிலவற்றை செய்து கொடுக்கிறாங்க...
அப்பா அருண் வந்ததும் அனைவரும் வெளியில் செல்லலாம் என திட்டமிட்டாங்க..

பல நாட்களாக அலுவலகம் விட்டா வீடு,வீட்டிற்கு வந்தால் சந்தோஷினியுடன் சில நேரம்,அம்மா லதா எந்த வேலையையும் செய்ய சொல்லுவதில்லை.வீட்டிற்கு தேவையானதை அம்மா லதாவே வாங்கிக் கொள்வதால் அந்த வேலையும் இருப்பதில்லை.ஆக இப்படியே அவர்களின் நாட்கள் சென்று கொண்டிருந்தது.
ஏனென்றால் சந்தோஷினியை பார்க்கவே அவரிகளுக்கு நேரம் சரியாக இருந்தது.

அதனால் இன்று பாட்டியும் சேர்ந்து பார்த்ததால் வேலையும் முடிந்தது.
அனைவரும் அப்பா அருண் அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் எப்படி கேட்பது...வேலை அதிகமாக இருந்திருந்தால் டையர்ட் ஆக இருக்குமே.. என யோசித்து கொண்டிருந்தனர்.பாட்டி கேட்டவுடன் சம்மதம் தெரிவித்தார்.பின்பு அங்கு இருக்கும் பெரிய கோவிலுக்கும்,கடற்க்கரைக்கும் மகிழ்ச்சியாக குட்டிமாவுடன் சென்று வந்தனர்.
குட்டிமாவும் சமத்தாக இருந்தாள். படுத்து தூங்கும் போது பாட்டியிடம் கதை சொல்ல சொல்லி கேட்கிறாள்.
பாட்டியும் கதை சொல்லுகிறாள்.....
ஒரு பெரிய காட்டில....நிறைய மரம்... செடி.. கொடிகள்,அப்பறம் நம்ம டி வி ல பார்ப்போமே என்ன சொல்லுமா என்று கேட்டாங்க...
புலி.....
ஆ....அப்பறம் என்ன பார்ப்போம்...
யான........ஆ யானை...அப்பறம் வேற என்ன பார்த்தோம்...
சிங்கம்.....ம்....
அந்த சிங்கம் தான்....எது பாட்டி என கேட்கிறாள்.
அவள் வைத்திருந்த புத்தகத்தில் இருந்த சிங்கத்தை எடுத்து காமிக்கிறாங்க..

பின் அந்த சிங்கம் அந்த காட்டில பெரிய ராஜாவாக இருந்தது.தினமும் அது
மத்த விலங்கு எல்லாம் இருக்குல அதுல ஏதாவது ஒன்ன பிடிச்சு அப்படியே புடிச்சு சாப்பிட்டிடும்....

இதனால பயந்த எல்லாரும் சோகமாக "உம்" ன்னு இருந்துச்சுங்க...என்ன பண்ணலாம்? எல்லாம் யோசனை பண்ணுச்சாம்...
அப்போ நரி சிங்கத்து கிட்ட போகி சிங்கராஜா....சிங்க ராஜா.....
யாரை எப்போ சாப்பிடுவீங்க ன்னு எங்களுக்கு தெரியல...
அதனால எல்லாரும் வெளிய வரவே பயமா இருக்குன்னு.....உம் ன்னு இருக்காங்க சொல்லுச்சாம்.....

ஒ..அதுவா...சரி நீங்களே உங்களில் யாராவது தினமும் என்னிடம் வந்திட்டீங்கன்னா நான் வெளிய வரல ன்னு சொல்லிடுச்சு...சிங்கம்
வெளிய வந்த நரி சொல்லுச்சாம் எப்படியும் ஒரு நாள் சாப்பிடத் தான் போகுது சிங்க ராஜா....

குட்டிமா அப்படியே பாட்டியின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள்...
தாத்தா காற்று வாங்க வெளியில் அமர்ந்திருந்தாங்க....
குட்டிமா என்ன் ஆச்சி பாட்டி சொல்லுங்க..கேட்கிறாள்..
அம்மாவும் படுக்க போறாங்க..அப்பா ஏதோ கணினியில பார்த்து கொண்டிருக்கிறார்...
வா மா....போயி தூங்கலாம் என சொல்ல...பாட்டியோட இருக்கிறேன் சொல்லிவிடுகிறாள்....
தாத்தா பாட்டியோட படுக்க செல்லுகிறாள்....
ம்...பாட்டி சொல்லுங்க....
சிங்கத்துக்கிட்ட மாட்டிகிறத விட தினமும் ஒருதர் அந்த குகையில் உணவாயிட்டா மத்த எல்லாரும் நிம்மதியாக இருக்கலாம் ன்னு சொல்லுது...

ஒரு ஒரு நாளும் ஒவ்வொருத்தவங்க போனும் சொல்லிடுது......
சரி இருக்கிற நாள் வரை இருப்போம் எல்லாம் நிம்மதியா இருப்போம்ன்னு எல்லாம் போயிடுச்சு...
ஆனால் முயல் மட்டும் நாம எப்படியாச்சம் தப்பிக்கணுமே யோசிச்சு கிட்டே இருந்துச்சு.....
ஒவ்வொரு நாளும் ஒரு விலங்கு போயிடும்....சிங்கம் அப்படியே புடிச்சு சாப்பிட்டிடும்....

அப்பொ ஒரு நாள் அந்த நரி இந்த முயல கூப்பிட வந்துசு....முயலுக்கு சோகமா இருந்ததால் அங்க இருக்கிற கிணறு கிட்ட உட்கார்ந்து நாம அந்த சிங்கத்துகிட்ட மாட்டிகிறத விட இந்த தண்ணி குதிச்சிடலாமான்னு யோசிச்சுது....எட்டி பார்த்த போது இந்த நரி..ஏய் முயல வா...வா.... போலாம்ன்னு சொல்லுச்சு....
இன்னிக்கு நீ தான்...ராஜா கிட்ட போனும்...
உடனே முயல் துள்ளி குதிச்சுகிட்டு ம்..போலாமேன்னு சொல்லுச்சு....
குட்டிமா இப்போ ஊத்து பார்க்கிறாள் பாட்டியை...அடுத்து பாட்டி என்ன சொல்ல போறாங்க என..பாட்டி கொஞ்சம் நேரம் நிறுத்தினாங்க..
பாட்டி ...ம்...என்ன ஆச்சு ன்னு குட்டிமா கேட்கிறாள்....
எல்லா விலங்கு சோகமா வரும் இந்த முயல் மட்டும் சந்தோஷமா வருதேன்னு நரி நினைச்சுது....
(தொடரும்)

Sunday, January 17, 2010

பதில் கிடைத்த சில கேள்விகள்...(8)

சொர்க்கவாசல் நடை திறப்பு மற்றும் கண்ணாடி வாசல் திறப்பு இதனை பற்றி சொல்லுங்க...இவ்விரண்டிற்கும் என்ன வித்தியாசம்...
விரதம் பற்றி பத்ம புராணத்தில் சொல்லப்பட்டு இருக்கு..

இதைப் பற்றி ஒரே கதையைப் பல இடங்களில் படிச்சிருக்கேன்.. (வார்த்தை மாறாமல்)

பத புராணத்தில் சொல்லப் பட்டதை மிக விரிவாக எழுதி இருக்கிறார்.
உ.வெ,பெருகரணை சுவாமிகள் என்பபவர்.
அதை இங்கே கிளிக் செய்யவும்.

சொர்க்க வாசல் திறப்பு என்பது ஒரு குறியீட்டு விழா.

அன்று வைகுண்டப் பதவியை அனைவரும் அடைய வேண்டும் என்றச் சிந்தனையோடு முழுதான விரதம் இருந்தால் வைகுண்ட வாசல் அவருக்குத் திறந்தே இருக்கும் என்று சொல்வதை குறிப்பாக உணர்த்தத் தான் சொர்க்க வாசல் திறப்பு நடத்தப்படுகிறது.




பரமபத விளையாட்டும் இதையொட்டியே அமைகிறது. அதோட பெருமையை எனக்கு வேலையே வைக்காமல் இங்கே கிளிக் செய்யவும்.

இன்னும் காலம் கடந்து விடவில்லை. நல்வழி திரும்பினால் நற்கதி உனக்கு உண்டு என்பதன அடையாளமாகவே விரதங்கள், பாப விமோசனங்கள், பரிகாரங்கள் ஆகியவை அமைகின்றன. வைகுண்ட வாசல் அனைவருக்கும் திறந்திருக்கிறது. நல் சிந்தனையும் நல்ல வாழ்க்கையும் மட்டும்தான் தேவை என்பதை உணர்த்தவே சொர்க்க வாசல் திறப்பு நடை பெறுகிறது.

இந்தச் சொர்க்க வாசல் பெருமாள் கோவில்களில் மூலஸ்தானத்திற்கு வடக்கு திசையில் அமைக்கப்படும்.

சொர்க்க வாசல் வழியாக பகவான் வெளியே வருகிறார்.. நாமும் அவருடன் வெளியே வருகிறோம். அதன் வழியாக வெளியே வரும் பெருமாள் கோவில் பிராகரத்தில் எழுந்தருள்வது, உனக்காக நான் காத்திருக்கிறேன் என்பதை உணர்த்துகிறார்.


பல கோவில்களில் சொர்க்க வாசல் வழியா உள்ளே போய் மூலஸ்தான இறைவனை தரிசிக்கலாம். சில பெரிய கோவில்களில் அப்படி இல்லை.. பரமபத வாசல் வழியா நம்மளை வெளிய அனுப்பறாங்க.

நாமும் மூல்ஸ்தான இறைவனை தரிசித்து விட்டு பரமபத வாசல் வழியே வெளியே வந்து உற்சவ மூர்த்தியை தரிசிக்கிறோம்.. (அப்போ நாம் வைகுண்டத்துக்குப் போகலியா என எண்ணம் எழுவதை தவிர்க்க முடியாது)

கண்ணாடி மாளிகை திறப்பு என்பதற்கு தனியாக நாட்கள் இருப்பதாக எண்ணினாலும் ஆனால் அப்படி இல்லை. சேலம் கோடை பெருமாள் கோவிலில் கண்ணாடி மாளிகை அனுதினமும் திறந்தேதான் இருக்கிறது..

காணும் அத்தனையிலும் நானே இருக்கிறேன் அப்படின்னு கீதையில் கண்ணன் சொன்னபடி, எண்ணிலடங்கா இறை திருவுருவங்களை காட்டி விசுவரூபம் என்பது எப்படி இருக்கும் என்பதை சின்ன சாம்பிள் காட்டுவது போன்றது கண்ணாடி மாளிகை.

கண்ணாடி மாளிகையில் நடுவில் பெருமாள் எழுந்தருள, அனைத்துப் பக்கங்களிலும் கண்ணாடியால் வேயப்பட்டிருக்கும். இதனால் திரும்பும் திசையெல்லாம் இறைவனும் நாமும் தெரிவோம்..

கண்ணாடி மாளிகை தரிசனம் என்பது விஸ்வரூப தரிசனத்திற்கு ஒப்பானதாகும்

இது பெருமாள் கோவிலுக்கு மட்டுமே உரித்தானதல்ல.. சில சிவன் கோவில்களிலும் (சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் கோவிலில் நடராஜர் கண்ணாடி மாளிகையில் இருக்கிறார்)

எல்லாவற்றையும் சடங்குகளாக்கி ஏன் எதற்கு எப்படி அப்படின்னு தெரியாமல் செய்வதை விட

புரிந்து செய்தால் அந்த அனுபவம் தனிதான். கண்ணாடி மாளிகை அடுத்த முறை செல்லும் பொழுது இதுதான் அர்ச்சுனனுக்கும், கர்ணனுக்கும் பீஷ்மருக்கும், யசோதைக்கும் கண்ணன் காட்டிய விசுவரூபம் என எண்ணிப் பாருங்க புரியும்.

நன்றிகள்:தாமரை செல்வன் அவர்கள்[தமிழ் மன்றம்]

Saturday, January 16, 2010

குட்டீஸ்...(12)


முதல் பக்கம் பார்க்கிறாள்....அப்பா அம்மா ஒன்றாய் இருந்த படம்..அ..ப்...பா அ..ம்...மா.....என்று சொல்லுகிறாள்..
அடுத்த பக்கத்தில் தாத்தா...பாட்டி....என சொல்லிக் கொண்டிருக்கும் போது தாத்தாவும் பாட்டியும் நேரிலே வந்து விட்டனர்...குட்டிமா தாத்தா...என்று ஓடி செல்கிறாள்...
குட்டிமாவை தூக்கி கொள்கிறார் தாத்தா...
குட்டிமாவிற்காக வாங்கி வந்த சாக்லேட்டை பாட்டி கொடுக்கிறாங்க...
உள்ளே வந்து அமர்ந்த போது அம்மா இருவருக்கும் தண்ணீர் கொண்டு வந்து தருகிறாள்.
பால் வந்தது.... அம்மா சமையல் அறைக்கு சென்று வேலையை பார்க்க தொடங்குகிறாள்..
அப்பா அருண் உள்ளே நுழைந்தவுடன் தன் அப்பாவும் அம்மாவும் வந்திருப்பதை பார்க்கும் போது சர்ப்ரைஸாக இருந்தது.சின்ன புன்சிரிப்புடன் இருவரையும் பார்க்கிறார்...

அப்பா இங்க பாருங்க..பாட்டி தந்த சாக்லேட் என்று குட்டிமா காமிக்கிறாள்...
அப்பா தன் மடியில் குட்டிமாவை உட்கார வைத்து கொண்டு இருவரிடமும் எப்போ வந்தீங்க..பயணம் எப்படி இருந்தது என்றெல்லாம் பேசி கொண்டிருந்தார்.

பாட்டி குட்டிமாவிற்கு தலைசீவி பூ வைத்து அழகு பார்க்கிறாள்..சின்ன முடி தான் இருந்தாலும் அதிலும் அழகை ரசிக்கிறாள் பாட்டியாக...

குட்டிமாவிற்கு சந்தோஷமாக இருந்தது .பாட்டி தாத்தாவிடம் புதுசா வாங்கின பேக்,புக்ஸ் எல்லாவற்றையும் காட்டி மகிழ்ந்தாள்.
அப்போ தாத்தா இங்க பாருங்க செல்லம்.... என்று புது டிரஸ்ஸை கொடுத்தாங்க....
ஸ்கூல் போகும் போது நாளைக்கு போட்டுட்டு போகலாம் என பாட்டி சொல்லுறாங்க...
குட்டிமா கிட்ட வந்து தொட்டு தொட்டு பார்க்கிறாள்...
குட்டிமா மகிழ்ச்சியாக இருந்தாள்...

மறுநாள் காலை புது டிரஸ் போட்டு கொள்வதால் சீக்கரமாக தூங்கி எழுந்தாள் குட்டிமா..
பள்ளி செல்லும் போது அழகாய் ஒரு குட்டி தேவதை போல இருந்தாள்...

நேற்று பள்ளியிலே இருந்த அம்மா இன்று குட்டிமாவிடம் குட்டிமா தாத்தா பாட்டி வந்திருக்காங்கல நான் வீட்டிற்கு போயிட்டு குட்டிமா ஸ்கூலைவிட்டு வரும் போது இங்க வந்திடுறேன் செல்லம்..அழாம உள்ள படிக்கணும் சரியா...
என்று சொல்லி விடுகிறாள் பள்ளியின் வாசலில்....

புது சட்டை போட்ட மகிழ்ச்சியில் அம்மா சொன்னதை காதில் வாங்காமலே சட்டையை பார்த்து கொண்டே தலையாட்டினாள்.
உள்ளே ஆசிரியை சந்தோஷினியை வந்து அமர சொன்னாங்க.
அடிப்படையில் பிள்ளைகள் அழக்கூடாது என்பதற்க்காகவே சின்ன சின்ன பாடல்களை சொல்லி தர ஆரம்பித்தார்கள்.
பின் அதிலும் தனித்திறமை வெளிப் படவேண்டும் என ஒவ்வொரு குழந்தையையும் பாட வைத்து செய்கையுடன் செய்ய வைப்பது வழக்கமாகியது.

அர்த்தமுடனோ...அர்த்தமில்லாமல் வெறும் ஒலிக்காகவோ என எல்லாம் சேர்ந்த கலவையாக தான் இருந்தது பாடல்கள்.
ரெயின் ரெயின் கோ அவே என்ற பாடல் வெளி நாட்டில் மழை பெய்த போது பாடியது.
அதனையும் இன்று மழை பெய்யாத போது பாடுவது ஒரு பயிற்சியாக கொண்டது
பள்ளியின் பாடத்திட்டம்.
அந்த பாடலையும் சொல்லி கொடுத்து தன் மாணவர்களை மதிப்பெண்கள் வாங்க வைக்க வேண்டிய கட்டாயம் என ஆசிரியைக்கு தோன்றியது.
அதில் சில நல்ல பாடலும் இருக்கும்.
அதில் ஒன்று சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.குப்பைகளை கீழே இருந்தால் அதனை அள்ள வேண்டும் என்று சொல்லி தர ஆசிரியை சுத்தமாக இருந்த வகுப்பில் சின்ன சின்ன தாள்களை கீழே போட்டு

Bits of paper.... bits of paper....
கீழே காமிச்சாங்க... சத்தத்தை கேட்ட மாணவர்கள் ஆசிரியையை பார்த்து கொண்டிருந்தனர்.
Lying on the floor..lying on the floor...
இரண்டு பக்கங்களும் கைகளால் கீழே காமிக்கிறாங்க....
Make the place untidy...Make the place untidy...
இந்த குப்பைகள் வகுப்பில் உள்ளதால் முஞ்சை சுளித்து கொண்டு ச்சீ என்பதை போல முகபாவனை காமிக்கிறாங்க...
Pick them up ......pick them up போட்ட தாள்களை திரும்ப எடுத்தாங்க...
Put it in the dustbin... put it in the dustbin மூலையில் உள்ள குப்பைத் தொட்டியில் அதனை போட்டாங்க பாடிக்கொண்டே...

ஆனால் ஆசிரியை சில மாணவர்கள் சின்ன சின்ன தாள்களை கிழித்து கிழித்து போட்டு அதனை அள்ளிவிட வேண்டும் என நினைக்கிறார்கள் என்பதனை அறிந்ததால் பாடலின் விளக்கத்தை சொல்லி..... கீழே வழியில் பார்த்தால் அல்லது வீட்டிலும் எங்கும் குப்பைகளை பார்த்தாலும் அதனை எடுத்து குப்பைத்தொட்டியில் தான் போட வேண்டும் என்று சொன்னாங்க.

பின் ஸ்னாக்ஸ் சாப்பிட்டு சில பிஸ்கட் கவர்,சாக்லேட் கவர் கீழே இருந்ததை பார்த்து திரும்பவும் இந்த பாடலை பாடினாங்க...சில மாணவர்கள் புரிந்துக் கொண்டு குப்பைகளை பாடிக்கொண்டே எடுக்க தொடங்கினர்...பழக்கத்தை மனதில் புகுத்தினாங்க...தேவையில்லாததை குப்பைத்தொட்டியில் போட வேண்டுமென அறிந்தார்கள்.

இந்த பழக்கம் வீட்டிலும் அவர்கள் கடைப்பிடிக்க தொடங்கினார்கள்.

(தொடரும்)

Sunday, January 10, 2010

பதில் கிடைத்த சில கேள்விகள்...(7)

10]அந்த காலத்தை பற்றி பேசுவது ,அந்த அனுபவத்தில் இன்றும் (பல வகையில் முன்னேறிய பிறகும்) செயலில் கொண்டுவருவது என்பது தான் "பண்பாடு"என்று சொல்லுகிறோமா?
இல்லையென்றால் "பாரம்பரியம்" என்பதா....



பண்பாட்டைப் பற்றிய விரிவான பதில் இங்கே==எல்லாக் கலாச்சாரங்களுமே மாறிவிட்ட (மாறிக்கொண்டிருக்கும்) இந்த காலத்திலும் நமது கலாச்சாரம் பண்பாடு என்று பேசுவது , வாதிடுவது சரியா? உங்கள் கருத்து என்ன?

கலாச்சாரம், பண்பாடு என்பது நமது முன்னோர்கள் செய்தது மட்டும்தான் என்பது சரியான அர்த்தமல்ல.

சமூக அமைப்பில் மக்கள் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும், உற்சாகத்துடனும் வாழ சில நல்ல வழிமுறைகளைக் கையாள்கிறோம். இவையே பண்பாடு ஆகும்.

இன்சொல் கூறுதல், இயலாதோரைக் காத்தல், விருந்தோம்பல், அனைவர்க்கும் நன்மை செய்தல், புறங்கூறாமை, சுயநலம் பாராமை, பகிர்ந்துண்ணுதல், நல்லவற்றை மனமாற ஏற்றல், பெரியாரைப் பணிதல், இப்படிப் பல நல்ல விஷயங்கள் நமது பண்பாட்டில் உள்ளன. உடை அணிதல் மட்டும்தான் பண்பாடு என நடுத்தெருவில் விளக்குமாறு சகிதம் கூச்சலிடுதல் அல்ல பண்பாடு.

பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றை சுட்டி நிற்க்கின்றது.

கலாச்சாரம் என்பது பண்பாட்டின் ஒரு பகுதியாகும்.

மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.இவை கலாச்சாரம் என அறியப்படுகின்றன. இது காலத்திற்கு ஏற்றபடி மாறுகிறது. மாறிகிட்டே இருப்பதுதான் கலாச்சாரத்தின் வளர்ச்சி, மாறாட்டி அது செத்துப் போச்சுன்னு அர்த்தம்.

மொழின்னா வளரணும், உணவில் புது ருசிகள் வந்துகிட்டே இருக்கணும், இசையில் பல புதிய பரிமாணங்கள் வரணும். சமயம் மனதை மேலும் மேலும் தெளிவாக்கிகிட்டே போகணும். இப்படி மாறிகிட்டே இருப்பதுதான் கலாச்சாரம்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வழுவினானே..

என்று 2000 ஆண்டுக்கு முன்பே மாறுதலுக்கு உட்பட்டவையே எல்லாம் என்று நாமே சொல்லியிருக்கோம். இப்ப மாற மாட்டோம்னு அடம்பிடிச்சா பண்பாட்டை காக்கிறோமா இல்லை மாய்க்கிறோமா?

சிலமுறை நானே சொன்னதுதான், நல்ல விஷயங்கள் மறந்து போய் சடங்குகளை மட்டுமே இப்போது கட்டி அழுதுகிட்டு இருக்கோம்.

நம்ம பண்பாடு நம்ம கலாச்சாரம் என்னன்னே நமக்குத் தெரியலை என்பதுதான் உண்மை. முதல்ல அதை முழுசா புரிஞ்சிக்குவோம். போராடுவதெல்லாம் அப்புறம்.

நமது சமூகத்தின் அறிவு விசாலப்படும்பொழுதெல்லாம் பண்பாடு மாறுகிறது. அறிவு குறுகிப் போகும் போதும் பண்பாடு மாறுகிறது.

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே அப்படின்னோம். இன்னிக்கு யானைகளை காப்பாத்த வேண்டியச் சூழ்நிலை. இப்ப போய் நம்ம பண்பாட்டின் படி யானைகளைக் கொல்லணும் என்று சொல்லமுடியுமா என்ன?


இந்தப் பண்பாடு, கலாச்சார மாறுதல்களை எதிர்க்கும் போராட்டங்களில் 90 சதவிகிதம் ஆதிக்கப் போராட்டம்தான். அது நம்ம பண்பாடே இல்லைன்னு கூட அவங்களுக்குத் தெரியாது..

சும்மா காப்பியடிப்பது பண்பாட்டு வளர்ச்சி அல்ல. உணர்ந்து புரிந்து ஏற்றுக் கொள்ளுதல் தான் பண்பாட்டு வளர்ச்சி.

பாரம்பரியம் என்பது பரம்பரையாக, தலைமுறை தலைமுறையாக காத்து வரும் சில பண்பாடுகள்.

ஏன் இதைச் செய்கிறோம் என்பதை உணர்ந்து செய்யும்பொழுது அர்த்தமுள்ள பாரம்பரியங்கள் காக்கப்படுகின்றன. காலத்திற்கு ஒவ்வாதது மாறுகிறது.

அர்த்தம் மறந்து போன பாரம்பரியங்கள் சடங்காகி பின்னர் சம்பிரதாயமாகி பின்னர் ஒப்புக்கு என்றாகி கடைசியில் அழிந்து போகின்றன.

Friday, January 8, 2010

குட்டீஸ்...(11)

குட்டீஸ்...(11)
அப்போ அதற்குள்..அங்க.....ப்ரவீன் தன் தண்ணீர் குப்பியை கீழே போட்டுவிட்டான்....
அம்மா வீட்டில் கீழே போட்டால் அடிப்பாங்க என்பதால் அவன் பயத்தில் நின்று கொண்டிருந்தான்.
அம்மாவின் பாசத்தை இந்த முழுபாட்டில் தண்ணீர் என்பது போல ப்ரவீன் அம்மா கொடுத்தை தூக்க முடியாமல் தான் இச்சிறுவன் கீழே போட்டதை அறிந்து கொண்ட ஆசிரியை அவனிடம் வந்து சரி பரவால..நீ இப்படி வந்து நின்று கொள் என கூறிவிட்டு பின் அந்த குப்பியை எடுத்து இருந்த தண்ணீரை மூடியில் ஊற்றி கொடுத்து குடிக்க சொல்லுறாங்க...
பின் எல்லா மழலையையும் வீட்டிற்கு செல்ல ஆயத்தமாக அமர வைக்கிறாங்க...
எல்லாரும் நாளைக்கு அழாம சமத்தா வரணும் சரியா..என்று ஆசிரியை மாணவர்களை பார்த்து சொல்லுறாங்க...
புரிந்தது போல சில பிள்ளைகள் தலையாட்டினார்கள்...
எல்லாரையும் கை தட்ட சொல்லி பின்பு இறைவழிபாடு செய்ய வைத்து வீட்டிற்கு செல்ல முதல் அறைக்கு அழைத்து வருகிறாங்க...

அந்த பள்ளியின் சிறப்பே ஒவ்வொரு வாசலிலும் ஒரு ஆசிரியை விதம் சின்ன சிறார் விழுந்து விட கூடாது என்பதால் வீட்டிற்கு செல்லும் போது வகுப்பு செல்லாத ஆசிரியைகள் தங்கள் அறையில் இருந்து வந்து வழி அனுப்ப வேண்டும்...
இதனால் பிள்ளைகள் மிக கவனமாக செல்லுவார்கள்...

வெளியில் சந்தோஷினியின் அம்மா ஆவலாக காத்திருக்கிறாள் மகள் வரிசையில் வருவதை காண்கிறாள்....
பின் சந்தோஷினி சிரித்து கொண்டே "அம்மா..... " என்றாள்...
குட்டிமா.....என்று சொல்லி கொண்டே பையை பார்க்கிறாள்...அவள் தான் வைத்த பழங்களை சாப்பிட்டாளா..என...
குட்டிமா ஆப்பிள் சாப்பிட்டீங்களா....
ம்.. சாப்பிட்டேன் அம்மா.அம்மா..அங்க பாருங்க.....அந்த மிஸ் தான் எங்க மிஸ் அம்மா..என்று தன் ஆசிரியை கைக் காட்டுகிறாள்...
பின் லதாவும் சந்தோஷினியும் வெளியே வந்தனர்...
குட்டிமாவை தூக்கி கொண்டாள் லதாம்மா..
பின் தன் வகுப்பறையில் பார்த்ததை சொல்லி கொண்டே வந்தாள்...
அம்மழலையில் பேச்சிலே வீடும் வந்து விட்டது...
அம்மா முன் கதவை திறந்து கீழே இறக்கி விட்டதும் துள்ளி செல்லுகிறாள் கதவின் அருகே...
அம்மா வாசலில் உள்ள கதவை சாத்திவிட்டு உள்ளே வருகிறாள்...
கதவை திறந்ததும் அம்மா அப்பா எப்போ வருவாங்க என்று கேட்கிறாள்....காதில் வாங்கது போலவே இருந்தாள் லதாம்மா...
குட்டிமா..வாங்க என்று சொல்லி கொண்டே....குளியல் அறையில் காலை கழுவ சொல்லுகிறாள்...முகம் கை கால்களை அலம்பி விடுகிறாள் அம்மா....
தண்ணியில் ஆடுவது என்றால் சந்தோஷினிக்கு ரொம்ப பிடிக்கும்....இப்போ வேண்டாம் வா...என்று அழைத்து கொண்டு உள்ளே சட்டையெல்லாம் மாற்றி விடுகிறாள்..
அப்பா எப்போ வருவாங்க என்று கேட்கிறாள்....திரும்பவும் குட்டிமா...

இப்போ வந்திருவாங்க செல்லம்.....இங்க விளையாண்ட்டு இருங்க..அம்மா போயி சமையல் செய்துவிட்டு வருகிறேன்....என்று சொல்லிவிட்டு சமையல் அறை நோக்கி செல்லுகிறாள்....

வண்ணமயமான அவளின் பந்தை வைத்து கொண்டு விளையாடினாள்...

அப்பா வந்து குட்டிமாவின் கண்ணை மூடுகிறார் பின் பக்கமாக வந்து...
குட்டிமா...அப்படியே அந்த கையை பிடித்து கொண்டு அப்பா என்று கத்தினாள்...

எப்படிடா தெரியும் அப்பா தான் கேட்கிறார் அருணப்பா....
அம்மா சொன்னாங்க...
சரி ஸ்கூல் பிடிச்சுருக்கா குட்டிமாக்கு என்றார்...
ம்...அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லுகிறார்....
லதா..இங்க வா...குட்டிமா பேசுறதை பார்க்காம அங்க என்ன பண்ணுற....
வழியெல்லாம் அவள் சொல்லி கேட்டதால் அவள் வேலை செய்து கொண்டு
மதிய உணவை எடுத்து மேஜையில் வைத்து கொண்டிருந்தாள்...

வாங்க வாங்க..அப்பாவும் பொன்னும் அப்பறம் பேசலாம் வந்து சாப்பிடுங்க....
என்று சொல்லிக் கொண்டே குட்டிமாவிற்கு பருப்பு சாதம் பிசைந்து வைக்கிறாள்...

குட்டிமா....சாப்பிடலாமா...என்று அருணப்பா தூக்கி கொண்டே மேஜை அருகே வருகிறார்...

லதாம்மா சாப்பாடு போட்டு கொண்டே குட்டிமாவிற்கு ஊட்டி விடுகிறாள்....
குட்டிமாவிடம் பேசிக் கொண்டே....குட்டிமா சமத்தா சாப்பிட்டாள்.
பின் அருண் குட்டிமாவை தூங்க வைத்துவிட்டு மீண்டும் அலுவலகத்திற்கு செல்லுகிறாள்....
லதாம்மா தானும் சாப்பிட்டு குட்டிமா தூங்கும் நேரத்தில் தன் வேலைகளை முடித்துவிட வேண்டும் என செய்து கொண்டிருக்கிறாள்....
குட்டிமா தூங்கி எழுதவுடன் சற்று ஒன்றும் அறியாதவளாய் அமர்ந்து இருந்தாள்...
பின் வெளியே வந்து அம்மாவை தேடுகிறாள்...
அம்மா மாவை சலித்து கொண்டிருந்தாள்..அம்மா நான் செய்றேன் மா..இல்ல குட்டிமா...கீழே சிந்திடும் என்று சொல்லுகிறாள் அம்மா
அப்படியே பார்த்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவிடம் வருகிறாள்....
அம்மா மடியிலும் அமர்ந்து கொள்கிறாள்...
அம்மாவின் கையை பிடித்து கொள்கிறாள்...அம்மா கை ஆட ஆட...தன் கையும் ஆடுவதை ரசிக்கிறாள்...
அம்மா நான் ..நான் என்று திரும்ப திரும்ப கேட்கிறாள்..லதாம்மா கிடு கிடுவென எல்லாவற்றிஅயும் முடித்து கடைசி தடவை மிக கொஞ்சம் இருப்பதை தருகிறாள்...ஆட்டி ஆட்டி கீழே மாவு வருவதை பார்த்து சிரித்து மகிழ்கிறாள்...
அம்மா என்ன குட்டிமா என அவள் மூக்கில் மாவு கையுடன் வைக்கிறாள்...
குட்டிமா மூக்கில மாவு....தடவியவுடன் குட்டிமாவும் அம்மாவின் மேலே தடவினாள்....சின்ன மழலையின் கைகள் தொட....ஆனந்தமாய் அணைத்து கொண்டாள்...
சரி போதும் குட்டிமா என்றாள்...நீங்க போங்க அங்க ஆல்பம் இருக்கிறது திறந்து பாருங்க.... அம்மா இதோ வந்து விடுகிறேன்...
என்று லதாம்மா சொல்லுகிறாள்...

குட்டிமா ஆவலோட வந்து பார்க்கிறாள்....

முதல் பக்கம் திறக்கிறாள்.....உள்ளே..
(தொடரும்)

Thursday, January 7, 2010

பதில் கிடைத்த சில கேள்விகள்...(6)



9]பொங்கல் வருவதால் பொங்கல் பற்றி விளக்கமாக சொல்லுங்க....

போகி அன்று பழையது அழித்து விடுவது
பொங்கல் அன்று சூரிய பகவானை வழிப்படுவது

மாட்டு பொங்கல் அன்று கோமாதாவிற்கு படைப்பது
கரிநாள் அன்று விளையாடி மகிழ்வார்கள் என்பது தானா...இன்னும் தகவல் இருந்தால் சொல்லுங்க....தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்பதால் இதனை விமர்சையாக கொண்டாடுகிறோமா...உழவர்கள் நெல் அறுவடை செய்து தங்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நன்றி செலுத்துவதா..

கொஞ்சம் வித்தியாசமாகப் பார்ப்போம். மார்கழி மாதம் - இறை வழிபாட்டு மாதம் என்று சொல்வார்கள். வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என்ற இரண்டும் அந்த மாதத்தில்தான் வரும். திருப்பாவை நோன்பு,

திருவெம்பாவை நோன்பு என்ற இரண்டும் அந்த மாதம்தான்.


கார்த்திகை - மார்கழி மாதம்தான் ஐயப்பன் நோன்பும்...
மாதங்களில் நான் மார்கழியாக இருக்
கிறேன் என்கிறார் கண்ணன்.. மார்கழி மாதம் தெய்வ வழிபாடு தவிர திருமணம்,

காதுகுத்தல் போன்ற இல்ல விழாக்கள் செய்ய மாட்டார்கள். காரணம், மார்கழி என்பது அறுவடைக் காலம். விளைந்ததை பாடுபட்டு விளைய வைத்தது, சேதமின்றி காத்து வீடு சேர்க்க வேண்டும்.
நம்நாடு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு.

விவசாயம்தான் நம் நாட்டின் வளத்தின் அடிப்படையாகக் கொண்டது.
ஆனி மாதம் உழுது
,

ஆடியில் விதைத்து, மார்கழி இறுதியில் அறுவடை என்னும் ஒரு போகச் சாகுபடிதான் அந்தக்கால நெல்லுக்கு.
சூரியனின் பாதைக்கும், இந்தச் சுழற்சிக்கும் மிகப் பெரிய தொடர்பு உண்டு.

சூரியன் மாதம் ஒரு ராசி மண்டலத்தில் பிரகாசிக்கிறான். தை மாதம் சூரியன் மகர ராசி மண்டலத்தில் இருக்கிறான்.


நமது நாடு பூமியின் வடபாதியில் இருப்பதால் சூரியன் உக்கிரம் தணிந்து இருக்கும் காலம் இது. மகரரேகை என்று அட்ச ரேகைக்கு
பெயர் வைக்கக் காரணம் இதுதான். சூரியன் மகரராசியில் இருக்கும் பொழுது அவனது கதிர்கள் செங்குத்தாக படும் பாதை மகரரேகை. அதே போல்தான் கடக ராசியில் சூரியன் இருக்கும் பொழுது கடக ரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும். சூரியனே உழவர்களுக்கு முழுமுதற்கடவுள்.

சூரியனின் இயக்கத்தை ஒட்டியே அவர்களுக்கு வாழ்க்கை அமைகிறது.
சூரியன் கடக
ராசியில் பிரவேசிக்கும் பொழுது விதைப்பு தொடங்குகிறது. இதுதான் தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலம்.

கடகரேகையிலிருந்து மகரரேகைக்கு சூரியப்பாதை செல்லும் காலம் உழவர்களின் வாழ்க்கையில் முக்கியமான காலம். இது தட்சிணாயனம் என வழங்கப்படும். எந்த காரியம் என்றாலும் உத்திராயணத்தில் செய்ய வேண்டும் எனச் சொல்லும் இந்து மதம்,

தட்சிணாயனம் என்னும் இந்த ஆறு மாத காலத்தை உழவிற்காக ஒதுக்கி வை
த்துள்ளது. விவசாயம் செய்யும் காலத்தில் கவனச் சிதறல் கூடாது என்பதே இதன் அடிப்படையாகும். ஆறுமாதகாலம் உழவுத் தொழிலைக் கண்ணும் கருத்துமாகச் செய்து அதன் பலனான விளைச்சல் அறுவடையாகி தானியமாகி விட்டது.

ஆறு மாத கால இந்த தவத்தை நாம் நம் அலுவலகத்தில் புராஜக்டுகள் முடிந்த பின் வெற்றி விழா கொண்டாடுகிறோமே அது போல கொண்டாடும் முகமாக அமைந்ததே பொங்கல் விழா / அ
றுவடைத் திருவிழா / உழவர் திருவிழா என அமைந்த இந்த விழாக் கொண்டாட்டம்.

ஒரு பணியில் உதவியவர்களுக்கு பணி முடிந்த பின் எதையாவது பரிசளித்து நன்றி பாராட்டுகிறோமே அதைப் போன்ற ஒரு பண்டிகை. இதனுடன் தமிழனின் வாழ்க்கைத் தத்துவம் பின்னிப் பிணைந்து விட்டது. உணவு வளமே ஒரு நாட்டின் உண்மை வளமாகும்.

பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.
முதல் நாள் போகிப் பண்டிகை..

போகி என்பதை போக்கி என்பார்கள் சிலர். அதா
வது பழையவற்றைப் போக்குதல். வீட்டைச் சுத்தப்படுத்தி தேவையற்ற / உபயோகமில்லாதவற்றை எரித்து, அறுவடையான தானியம் சுத்தமான வீட்டிற்கு கொண்டு வருதல் என்பதாகும் இன்னும் மூன்று வித்தியாசமான வழிகளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

1. போகிப்பண்டிகை அன்று கூடி அழுது ஒப்பாரி வைக்கும் பழக்கம் சிலரிடையே இருக்கிறது. ஏனென்று ஆராய்ந்தால் அது புத்தர் இறந்த நினைவு நாள் என்கிற தகவல் இருக்கிறது. புத்தரா பீஷ்மரா என்பதில்
எனக்கு மாற்று கருத்து உண்டு. அம்புப் படுக்கையில் உயிரை நிஜமாகவே கையில் பிடித்துக் கொண்டு படுத்திருக்கும் பீஷ்மர் தன் உயிரை விடும் நாள் தை 1 ஆகும். பாரத யுத்தம் முடிந்தும், தர்மன் பட்டாபிசேகம் முடிந்து விஷ்ணு சகஸ்ரநாமம் எழுதினார். (இப்போ தெரியுதா ஏன் கண்ணனுக்கு மார்கழி மாதம் அவ்வளவு பிடித்தமானது என்று?) தர்மனுக்கு அரசியல் தர்மம் சொல்லிக் கொடுத்தார்.

2. போகிப் பண்டிகையை சங்கராந்தி என்று சொல்வார்கள். சங்கராந்தி என்ற ஒரு தேவதை உண்டென்றும் அவள் சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் காலத்தில் உலகத்தோர் அனைவரின் வீட்டிற்கும் வந்து செல்வாள் என்ற நம்பி
க்கை உண்டு. அந்த தேவதை வந்து சென்ற கோலத்தைப் பொருத்தே பஞ்சாங்க கணிப்புகள் இறுதி செய்யப்படுகின்றன. என்ன வாகனம், எத்தனை முகம், என்ன உண்டாள், எந்த திசை நோக்கிச் சென்றாள் என்பதைப் பொருத்து அந்த வருட பலன்கள் உறுதி செய்யப் படும். மகர சங்கராந்தி முடியாமல் பஞ்சாங்கங்கள் வெளியிடப் படுவதில்லை. (இதனால் அடுத்த ஆண்டு சுப காரியங்கள் செய்ய நாள் குறிக்க தை வரை காத்திருக்க வேண்டியது இருக்கிறது) பூளைப் பூ, வேப்பிலை மற்றும் ஆவாரம் பூ தோரணம் கட்டி வீடுகளை அலங்கரிப்பதும், மொச்சை அவரை எனப்படும் அவரையை வேகவைத்து, சங்கராந்தி தேவதைக்கு நிவேதனம் செய்து உண்பதும் இந்த வழிபாட்டிற்காகவே ஆகும்.



3. போகி என்றால் இந்திரன். மஹாபாரத காலத்தில் உழவர்கள் மழை மேகங்களுக்கு அதிபதியான இந்திரனுக்கே விழாக்கள் எடுத்தனர். கோவர்த்தன கிரியையும், மாடுகளையும் வணங்கச் சொன்னான் கிருஷ்ணன். இதனால் இந்திரன் கோபம் கொண்டு அடை மழை பெய்விக்க கோவர்த்தன கிரியை சுண்டுவிரலால் குடையாய் தூக்கி மக்களைக் கிருஷ்ணன் காத்தான். அதன் பின் இந்திரன் விஷ்ணுவே கிருஷ்ணன் என உணர்ந்து மன்னிப்பு வேண்ட, இந்திர விழா அறுவிடை திருநாளாக மாறியது. முதல் நாள் இந்திரனாகிய போகிக்கான திருவிழா எனவும், இரண்டாம் நாள் இயற்கைக்கும், மூன்றாம் நாள் கால்நடைகளுக்குமான வழிபாடாய் மாறியது என்பார்கள்


இரண்டாம் நாள் பொங்கல்.


இதைப் பற்றி நமக்கு நன்கு தெரியும். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும். அனைவருக்கும் அடுத்த ஒரு வருட காலத்திற்கு தானியம் கிடைத்து விட்டது. அரசாங்கத்திற்கோ வரி கிடைத்து விட்டது. ஏனைய தொழில் செய்வோரும் இதே காலத்தில் தங்களுடைய பாக்கிக்கான வசூல் கிடைத்து விட்டது. எனவே அனைவரும் சேர்ந்து நல்ல பருவங்களைக் கொடுத்த சூரியனுக்கு நன்றி சொல்லி வணங்கி அடுத்த ஆண்டின் நலனுக்காக பிரார்த்திப்பது பொங்கல்.
பார்த்தீர்கள் அல்லவா? உழவனுக்கு பணி செய்யும் தொழிலாளிகளுக்கும், வியாபாரிகளுக்கும் ஏன் அரசாங்கத்திற்கு வரியும் தைமாதம் தான் கிடைக்கிறது. எனவே அனைவருக்கும் இதைப் பொருத்துதான் அடுத்த வருட வாழ்க்கையே அமைந்திருக்கிறது. எனவேதான் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற வள்ளுவன் மொழியும் உருவானது. அதனால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது வழக்காகிப் போனது.


மாட்டுப் பொங்கல் மாடுகளுக்கு விழா எடுத்துச் சிறப்பித்தல் ஆகும்.

எல்லோருக்கும் நன்றி சொல்லியாச்சி. கையில ஏகப்பட்ட தானியம் இருக்கு. ஆறு மாசம் பெரிய வேலைகள் இல்லை. விழாக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகும் காலம். அதனால் காணும் பொங்கலன்று விளையாட்டுகள் அரங்கேறுகின்றன. (மாடு முட்டி காயமானா கூட ஆறு மாசம் இருக்கே தேறி வர)

ஜல்லிக் கட்டு தான் புகழ்பெற்றது என்றாலும் இன்னும் பல வீரவிளையாட்டுகளும் விளையாடப்பட்டன, சென்னை போன்ற நகரப் பகுதிகளில் காணும் பொங்கலன்று எங்கேயாவது புது இடம் சென்று கண்டு வரும் "காணும் பொங்கலாக" மாற்றி விட்டார்கள். அன்னிக்குப் பார்த்தீங்கன்னா சுற்றுலாத் தலங்களில் அவ்வளவு கூட்டம் இருக்கும்.

ஆக..

தை பிறந்தால் தான் அடுத்த வருட தானியச் சேமிப்பு.
தை பிறந்தால் தான் அடுத்த வருட பஞ்சாங்கமே பிறப்பு.

இப்படி தை மாதம் வாழ்க்கையின் ஆரம்பமாக தமிழனுக்கு இருப்பதால்தான்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்கிறோம்.


Sunday, January 3, 2010

ஆதியந்தக் கவிதை - சவாலுக்குத் தயாரா?[7]

காண்..!காட்சிகள் யாவும்
எங்கோ ஒளிந்திருக்கும்
சுயநலமாகவே தெரிகிறது
பார்க்கும் விதத்தில்
குற்றமோ...இல்லை
என்றால் அதுவே இயல்பாய்
மாறியதோ...

உயிரே...
என்று சொல்லி
பின்பு தங்கம்,வெள்ளி,
வைடூரியம் எனக் கொஞ்சும்
தாய் பிள்ளை பிரிந்தாலும்
சேய் என அவள் பாசம்
ஏய் என்றும் அழைக்காதவள்
தம்பி என்றும் சின்னவரை தம்
பாதி உயிர் கொடுத்து வளர்த்தாள்

தாயை விட உயர்ந்தவள் யார்?

என்று அறியவில்லை இதுவரை
ஆனால் தாய் காட்டிய தந்தை
தந்தை காட்டிய குருவும்
குரு காட்டிய கடவுளும்
அந்த கடவுளின் உருவமே
தாயாக நடமாடுகிறாள்
கண்முன்னே!

னைத்தும் அறிவார்
வலோடு தெரிவார்
யல்பாக நடப்பார்
கை தனை வளர்ப்பார்
ங்களையும் சேர்ப்பார்
ருக்கும் உழைப்பார்
ன்னவென்று கேட்பார்
காந்தமாய் இருப்பார்
யமதை நீக்குவார்
ன்றே என்று உரைப்பார்
வியம் தீட்டுவார்
வை மொழியில்
தே தமிழில் பாடுவார்

Friday, January 1, 2010

பதில் கிடைத்த சில கேள்விகள்...(5)

7]விளம்பரங்கள் செய்வது என்பது நடந்த நிகழ்வை கண் முன் காட்டுவதால் பார்காதவர்கள் கேள்வி படட்டும் என்பதற்காகவா...
ஊனமுற்றோருக்கு சக்கரம் வண்டி கொடுத்தற்கு ஓர் விளம்பரம்.....பெருமிததிற்கு விளம்பரமா....
தானம் செய்வது தன்னிறைவு அடைய தானே....
பொருட்களின் விளம்பரம் விற்பதற்கு....
இந்த மாதிரி விளம்பரம் ..... அவர்களை காயப்படுத்தாதா?

விளம்பரம் செய்வது என்பது வெகுவும் பொதுப்படையான ஒன்று. பலருக்கும் ஒரு விஷயம் தெரியப்படுத்தப் பட வேண்டும் என்னும் பட்சத்தில் விளம்பரம் செய்கிறோம்.


1. போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு இந்த இடத்தில் அளிக்கிறோம் என விளம்பரம் செய்கிறோம். இது நல்லது என சட்டென புரிவதால் இதைப் பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை,

2. நாம் விற்க நினைக்கும் பொருட்களைப் பற்றியும் நமது தரம் மற்றும் வியாபார சம்மந்தமான விலை, சேவை போன்றவற்றையும் விளம்பரம் செய்கிறோம்.

3. தான் செய்யும் தான தருமங்களை விளம்பரப்படுத்தி சுய விளம்பரம் தேடுதல். இதை ஒருபக்கம் இருந்து பார்த்தால் இது வெறும் கௌரவத்திற்குச் செய்யப்படுவது போல தெரியும். இன்னொரு பக்கம் பார்த்தால் இது இன்னும் சிலரையும் தானம் தர்மம் செய்யத் தூண்டும்...


ஆக பொதுவாகவே விளம்பரத்தில் எந்த அளவிற்கு உண்மை உள்ளதோ அந்த அளவிற்கு விளம்பரம் நல்லதே!!!

விளம்பரங்கள் காயப்படுத்துவதில்லை. அதில் உள்ள பொய்கள்தான்...
8]பகவத்கீதை,குரான்,பைபிள் இவை மூன்றும் புனித நூல்,
இறையை அடைய வழி என்பதை தவிர வேறு ஒற்றுமை உள்ளதா?

நீங்க சொன்ன முதல் ஒற்றுமை - புனித நூல் - ஓகே
இரண்டாவது ஒற்றுமை - இறைவனை அடைய வழி - இது வந்து சுத்தி வளைச்சு ஓ.கே

பைபிள் என்பது உலகவரலாறு (கிறித்துவ வழிப்படி) எனச் சொல்லலாம். அதாவது நம்து பிரம்மாண்ட புராணம் மாதிரி. இறைவன் எப்படி உலகத்தைப் படைச்சார், மனிதனைப் படைச்சார், அப்புறம் என்னாச்சி? ஆதாமின் வரலாறிலிருந்து ஆரம்பிச்சு ஆப்ராகாம், டேவிட், மோசஸ், கிறிஸ்து இப்படிப் பலப் பல வரலாறுகளை உள்ளடக்கியது பைபிள்.

குரான் என்பது முகம்மது நபி வாயிலாக இறைவன் சொன்ன வாழ்வியல் தத்துவங்கள்

பகவத்கீதை என்பது இறைவனே நேராக வாழ்வின் தாத்பர்யத்தையும், மாயையையும், யோகமுறைகளையும், (இராஜ யோகம், ஞான யோகம், கர்மயோகம்) விளக்கி படைப்பின் அர்த்தங்களை விளக்குவதாக அமைந்தது..

அதாவது பைபிள் பலரால் எழுதப்பட்டது.. குரானைச் சொன்னவர் இறைவன் எழுதியவர் நபி... கீதையை நேரடியாக கண்ணனே சொல்லிவிடுகிறார்.

இவற்றின் மூலம் ஒவ்வொரு மதமும் எது நல்ல வாழ்க்கை என்பதையே விளக்குகின்றன. இறைவனுடன் கலப்பது என்பது கீதையில் மட்டுமே.. குரான் பைபிள் போன்றவற்றில் இறையாட்சியில் பங்கு பெறுவது மட்டுமே பேசப்படுகிறது.

ஒற்றுமை என வழியத் தேடிப்பார்த்தால் சில பல கருத்துகளில் தெரியும்.
ஆனால் அப்படி தேட வேண்டிய அவசியம் இல்லை..

9]தூக்கம் என்பதில் அனைவருமே ஒற்றுமை (இரவில்)தூங்குவது.. இது எப்பொழுதிலேந்து ,எங்கிருந்து தொடங்கியது

இரவில் தூங்குவது இரவு ஆரம்பிக்கும் நேரத்தில் இருந்து, கண்ணை மூடுவதிலிருந்து தொடங்குகிறது..

பின்ன என்னங்க.. இதெல்லாம் பரிணாம வளர்ச்சி, மனிதனாக மனிதன் ஆவதற்கு முன்பிருந்தே இருக்கு.

நமது முக்கியமான புலன் கண். அதுக்குத் தேவை வெளிச்சம். அதனால வெளிச்சம் மிகவும் குறைந்த நேரத்தில் ஓய்வெடுப்பது என்பது ஆதிகாலத்தில் இருந்தே இருக்கு.





இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்



அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்...

வருகிற புத்தாண்டில் நன்மைகள் பல பெற்று இனிமையாக இன்பங்களாகவே அமைந்திடனும்,நிறைந்திடனும்.துன்பங்கள் அண்டும் போது அதனை எதிர் கொள்ள மனவலிமையை அந்த இறைவன் அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டு
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...
நன்றிகள்..