10]அந்த காலத்தை பற்றி பேசுவது ,அந்த அனுபவத்தில் இன்றும் (பல வகையில் முன்னேறிய பிறகும்) செயலில் கொண்டுவருவது என்பது தான் "பண்பாடு"என்று சொல்லுகிறோமா?
இல்லையென்றால் "பாரம்பரியம்" என்பதா....
பண்பாட்டைப் பற்றிய விரிவான பதில் இங்கே==எல்லாக் கலாச்சாரங்களுமே மாறிவிட்ட (மாறிக்கொண்டிருக்கும்) இந்த காலத்திலும் நமது கலாச்சாரம் பண்பாடு என்று பேசுவது , வாதிடுவது சரியா? உங்கள் கருத்து என்ன?
கலாச்சாரம், பண்பாடு என்பது நமது முன்னோர்கள் செய்தது மட்டும்தான் என்பது சரியான அர்த்தமல்ல.
சமூக அமைப்பில் மக்கள் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும், உற்சாகத்துடனும் வாழ சில நல்ல வழிமுறைகளைக் கையாள்கிறோம். இவையே பண்பாடு ஆகும்.
இன்சொல் கூறுதல், இயலாதோரைக் காத்தல், விருந்தோம்பல், அனைவர்க்கும் நன்மை செய்தல், புறங்கூறாமை, சுயநலம் பாராமை, பகிர்ந்துண்ணுதல், நல்லவற்றை மனமாற ஏற்றல், பெரியாரைப் பணிதல், இப்படிப் பல நல்ல விஷயங்கள் நமது பண்பாட்டில் உள்ளன. உடை அணிதல் மட்டும்தான் பண்பாடு என நடுத்தெருவில் விளக்குமாறு சகிதம் கூச்சலிடுதல் அல்ல பண்பாடு.
பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றை சுட்டி நிற்க்கின்றது.
கலாச்சாரம் என்பது பண்பாட்டின் ஒரு பகுதியாகும்.
மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.இவை கலாச்சாரம் என அறியப்படுகின்றன. இது காலத்திற்கு ஏற்றபடி மாறுகிறது. மாறிகிட்டே இருப்பதுதான் கலாச்சாரத்தின் வளர்ச்சி, மாறாட்டி அது செத்துப் போச்சுன்னு அர்த்தம்.
மொழின்னா வளரணும், உணவில் புது ருசிகள் வந்துகிட்டே இருக்கணும், இசையில் பல புதிய பரிமாணங்கள் வரணும். சமயம் மனதை மேலும் மேலும் தெளிவாக்கிகிட்டே போகணும். இப்படி மாறிகிட்டே இருப்பதுதான் கலாச்சாரம்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வழுவினானே..
என்று 2000 ஆண்டுக்கு முன்பே மாறுதலுக்கு உட்பட்டவையே எல்லாம் என்று நாமே சொல்லியிருக்கோம். இப்ப மாற மாட்டோம்னு அடம்பிடிச்சா பண்பாட்டை காக்கிறோமா இல்லை மாய்க்கிறோமா?
சிலமுறை நானே சொன்னதுதான், நல்ல விஷயங்கள் மறந்து போய் சடங்குகளை மட்டுமே இப்போது கட்டி அழுதுகிட்டு இருக்கோம்.
நம்ம பண்பாடு நம்ம கலாச்சாரம் என்னன்னே நமக்குத் தெரியலை என்பதுதான் உண்மை. முதல்ல அதை முழுசா புரிஞ்சிக்குவோம். போராடுவதெல்லாம் அப்புறம்.
நமது சமூகத்தின் அறிவு விசாலப்படும்பொழுதெல்லாம் பண்பாடு மாறுகிறது. அறிவு குறுகிப் போகும் போதும் பண்பாடு மாறுகிறது.
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே அப்படின்னோம். இன்னிக்கு யானைகளை காப்பாத்த வேண்டியச் சூழ்நிலை. இப்ப போய் நம்ம பண்பாட்டின் படி யானைகளைக் கொல்லணும் என்று சொல்லமுடியுமா என்ன?
இந்தப் பண்பாடு, கலாச்சார மாறுதல்களை எதிர்க்கும் போராட்டங்களில் 90 சதவிகிதம் ஆதிக்கப் போராட்டம்தான். அது நம்ம பண்பாடே இல்லைன்னு கூட அவங்களுக்குத் தெரியாது..
சும்மா காப்பியடிப்பது பண்பாட்டு வளர்ச்சி அல்ல. உணர்ந்து புரிந்து ஏற்றுக் கொள்ளுதல் தான் பண்பாட்டு வளர்ச்சி.
பாரம்பரியம் என்பது பரம்பரையாக, தலைமுறை தலைமுறையாக காத்து வரும் சில பண்பாடுகள்.
ஏன் இதைச் செய்கிறோம் என்பதை உணர்ந்து செய்யும்பொழுது அர்த்தமுள்ள பாரம்பரியங்கள் காக்கப்படுகின்றன. காலத்திற்கு ஒவ்வாதது மாறுகிறது.
அர்த்தம் மறந்து போன பாரம்பரியங்கள் சடங்காகி பின்னர் சம்பிரதாயமாகி பின்னர் ஒப்புக்கு என்றாகி கடைசியில் அழிந்து போகின்றன.
No comments:
Post a Comment